நிதித் துறை பற்றி
தமிழ்நாடு அரசின் பொது நிதியை செம்மையான முறையில் நிருவகிக்கும் பொறுப்பு நிதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிதித்துறையின் முக்கிய செயல்பாடுகள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 202-இன்படி சட்டமன்றப் பேரவையின் முன் வைப்பதற்கு அரசின் வரவினங்கள் மற்றும் செலவினங்கள் தொடர்பான மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
- மாநிலத்தின் கருவூலக் காப்பாளர் என்ற முறையில் தமிழ்நாடு அரசின் பொது நிதியை மேலாண்மை செய்தல்.
- மாநில அரசின் நிதிநிலை மேலாண்மை தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் தேவை ஏற்படும் போது அவற்றை மறுஆய்வு செய்தல்.
- அரசின் நிதிநிலை இலக்குகளை கருத்திற்கொண்டும், துறைவாரியான நிதித் தேவை, செலவுக்கேற்ற பயன், ஆகியவற்றின் அடிப்படையில் வரவு-செலவுத் திட்ட நிதியொதுக்கம் மற்றும் நிதி நடைமுறைகளுக்கு உட்பட்டு பல்வேறு கருத்துருக்களைக் கூர்ந்தாய்வு செய்து மதிப்பீடு செய்தல்.
- வரவுகளையும், அதற்கேற்றவாறு செலவுகளையும் சீராகப் பராமரிக்கும் பொறுப்புடன், கடன் பொறுப்புகளையும் அரசின் வரவுக்கேற்றவாறு பொருத்தமான செலவினங்களை மேற்கொள்வதும், பெறப்பட்ட கடன்களை உரிய காலத்தில் திரும்பச் செலுத்துவதை உறுதிசெய்வதும் இத்துறையின் பொறுப்பாகும்.
- இத்துறையானது, மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன் தேவையை நிருவகிப்பது மற்றும் கடன் மூலம் பெற்ற நிதியை திறம்பட பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்கிறது.
தொலை நோக்குத் திட்டம்:
துறைகளுக்கும் திட்டங்களுக்கும் முன்னுரிமை அளித்து, திறன்மிக்க நிதிமேலாண்மையுடன், மாநிலத்தின் நிதிநிலையின் வளத்தைப் பேணி பாதுகாத்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளையும் முன்னெடுப்புகளையும் செயல்படுத்துவதே நிதித்துறையின் தொலைநோக்குத் திட்டமாகும். நிதித்துறையில் பெருகி வரும் சவால்களைச் சமாளிப்பதற்கு, தொழில்நுட்பத் திறன்களுடன் கூடிய நவீன நடைமுறைகளை இத்துறை கடைப்பிடிக்கிறது. ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பேரியல் கூறுகளான மொத்த வரவுகள் மற்றும் செலவினங்களை நிதித்துறை நிருவகிக்கிறது. இந்தக் கட்டமைப்பிற்குள், செலவினத்திற்கான முடிவுகள் குறித்து, அதிக தன்னதிகாரம் வழங்குவதுடன் அதற்கான பொறுப்பினையும் கணிசமாக உயர்த்துவதை இத்துறை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இத்துறையானது அரசின் நிதியை திறம்பட பயன்படுத்துவதை உறுதிசெய்வதுடன், தணிக்கை முறையை மிகவும் வலுவானதாகவும் செயல்திறன் மிக்கதாகவும் மாற்றுகிறது. இந்த நோக்கங்களை அடைய பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் இடையீடுகள் செயல்படுத்தப்படும்:
- ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மற்றும் கருவூல அமைப்பினை வலுப்படுத்துதல்.
- ஏனைய துறைகளுக்கும் முகமைகளுக்குமான நிதிப்பாய்வினைக் கண்காணித்தல்.
- தணிக்கை முறைகளை வலுப்படுத்துதல்.
- நவீன வரவு செலவுத் திட்ட செயல்முறைகளை ஏற்றுக்கொள்ளுதல்.
- பொறுப்புடைமை மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல்.
- கொள்முதல் செயல்முறையின் செயல்திறனை மேம்படுத்துதல்.